திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராக இருந்தவர் கே.பி. ராமலிங்கம். திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர் கே.பி. ராமலிங்கம்.
திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கே.பி. ராமலிங்கம்.
அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு எதிராக, அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என்று திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி இராமலிங்கம் அறிக்கை வெளியிட்டார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதால், அவரது பதவி பறிக்கப்பட்டது.
கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக அவர் நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுகவில் இருந்து கே.பி.ராம லிங்கம் நிரந்தரமாக நீக்கப்படுவதாக, மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என கட்சி பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கே.பி. ராமலிங்கத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
ஆகையால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.