முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ள வேண்டும் – சிவசேனா

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் ஆளுநரை இன்று சந்தித்து பாஜக தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளனர். சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

எனினும் முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா நிபந்தனை விதித்து வருவதால் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஆளுநர் பகத்சிங்கை பாஜக மூத்த தலைவர்களான சந்திரகாந்த், பாட்டில், சுதீப் ஆகியோர் இன்று காலை சந்தித்து பேசுகின்றனர்.

அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்றும் நாளை மறுதினம் புதிய அரசு பதவி ஏற்கும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மறுத்துவிட்டார்.

முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது.

இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் பாஜக தலைமையிலான அரசு அமைய ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் புதிய அரசு அமைவதற்கான சாதகமான சூழல் இன்று ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே