ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்குவிப்பு

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு கடன் உதவித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான திட்டங்களுக்கு கடன் உதவி வழங்குவதற்காக 25 ஆயிரம் கோடி ரூபாயில் நிதியும் உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார தேக்க நிலையை சமாளிக்க அடுத்தடுத்து அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடு முழுவதும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்படாத கட்டுமான பணிகளை நிறைவு செய்வதற்காக சிறப்பு நிதியும் ஏற்படுத்தப்படும் என்று கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்காக சிறப்பு நிதி ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்தும் வகையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஏற்படுத்தப்படும் என்றும், இதில் 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசும், மீதமுள்ள தொகையை பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி ஆகியவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த சிறப்பு கடன் நிதி திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 58 ஆயிரம் வீடுகளைக் கொண்ட ஆயிரத்து அறநூறு கட்டுமான திட்டங்கள் பயனடையும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மும்பையில் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலான வீடுகளுக்கும், சென்னை டெல்லி போன்ற பெருநகரங்களில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கும், மற்ற பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கும் இந்த கடனுதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்பு ஏற்படுத்தபடுவதோடு சிமெண்ட், இரும்பு, உருக்கு தொழில்துறையில் தேவை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தின் மிகப்பெரும் துறைகளில் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த சிறப்பு நிதியத்தில் ஓய்வூதிய நிதியும் சேரும்போது கடன் வழங்குவதற்கான நிதியத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே