வங்க கடலில் அந்தமான் அருகே, நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவியது.
இது நேற்று, மத்தியகிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு “புல் புல்” (Bul Bul) என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து, தெற்கு-தென்கிழக்கில், 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவிலிருந்து, 830 கிலோ மீட்டர் தொலைவிலும், புல் புல் புயல் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த “புல் புல்” புயல், அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள “புல் புல்” புயல், வடக்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம், பங்களாதேஷ் நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புல் புல் புயல் மையம் கொண்டுள்ள மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.