மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு கண்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறையும், தமிழக தொல்லியல் துறையும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டன.
அப்போது 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான அடையாளங்கள் கிடைத்தன.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுதை சிற்பங்கள், சூது பவள மணிகள், விளையாட்டுப் பொருட்கள், உறைகிணறுகள், செங்கல் கட்டுமானங்கள், மிகச் சிறந்த நீர் நிர்வாகத்திற்கான வடிகால் அமைப்புகள் போன்றவை கிடைத்தன.
இவற்றை கீழடியிலேயே காட்சிப் படுத்தும் வண்ணம் கள அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ரூபாய் 10 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்காக ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தற்காலிக கண்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதலாவது தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.