திருச்சி பாரத் மிகுமின் நிலைய வளாகத்தில் செயல்பட்ட வங்கியிலிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் பாரத் மிகுமின் நிலைய (BHEL) வளாகத்தில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஊழியர்களுக்கென இயங்கும் இந்த வங்கியை ஒட்டி ஏடிஎம் இயந்திரமும் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது, அங்கு பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகம் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
மேலும் அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலின் அலிமினிய வலை ஸ்குரூ அகற்றப்பட்டு திறந்த நிலையில் இருந்தது.
ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த அலுமினியம் வலையை அகற்றி சுமார் ஒரு கோடியே 50 லட்சம் திருடப்பட்டுள்ளதை அறிந்த வங்கி அதிகாரிகள், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து பணத்தை திருடி சென்றதாக கூறியுள்ளனர்.
இந்த கொள்ளையில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பபட்டிருந்த 30 லட்சம் ரூபாயை அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நேற்று மாலை கொண்டு வந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது BHEL நிறுவன ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.