கேரளாவில் பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை, ஒரு கிராமத்துக்குள் உணவு தேடி சென்றுள்ளது.

அங்கு இருந்தவர்கள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை அதற்குக் கொடுத்துள்ளனர்.

கர்ப்பமாக இருந்த அந்த யானை, அதைச் சாப்பிட்டபோது, வெடிவெடித்து அதன் நாக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகள் சிதறின.

வேதனை தாங்க முடியாமல், தண்ணீருக்குள் இறங்கி நின்று, அந்த யானை தவித்தது.

வனத்துறை அதிகாரிகள், கும்கி யானையின் உதவியோடு, அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேரள அரசிடம், மத்திய அரசு கேட்டுள்ளது.

கேரள முதல்வர், பினராயி விஜயன், ‘இந்தக் கொடுஞ் செயலில் ஈடுபட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே