பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.1,805 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (டிச. 22) வெளியிட்ட அறிக்கை:

“பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) மத்திய அரசு பங்களிப்புடன் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2016-17 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 8,968 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4 லட்சத்து 1,848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒரு வீட்டுக்கான அலகுத் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். 

இதில் மத்திய அரசின் (60%) பங்குத் தொகை ரூ.72 ஆயிரம் மற்றும் மாநில அரசின் (40%) பங்குத் தொகை ரூ.48 ஆயிரம் ஆகும்.

இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு, கூடுதல் நிதியாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு வீட்டுக்கும் அளித்து வருகிறது.

இத்தொகையுடன் ஒரு வீட்டுக்கான மொத்த அலகு தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

இந்த அலகுத் தொகையுடன் கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியம் ரூ.23 ஆயிரத்து 40 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12 ஆயிரம் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து என்னால் ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாகவும், கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேற்கண்ட அலகுத் தொகையினைக் கொண்டு ஏழை எளிய மக்கள் வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதாகவும், தகுதியான குடும்பங்கள் வீடுகளை தாங்களே கட்ட இயலாத நிலையில் உள்ளதாகவும் எனது ஆய்வில் தெரிய வந்தது.

எனவே, ஏழை, எளிய மக்களின் கனவான குடியிருப்பு வீடுகட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரத்தை உயர்த்தி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அலகு தொகை ரூ1 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

இந்த தொகையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.23 ஆயிரத்து 40 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் சேர்த்து மொத்தம் ஒரு வீட்டுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 40 வழங்கப்படும்.

இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதனால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறுவர்.

இந்த கூடுதல் நிதி உதவியால் கட்டி முடிக்காமல் உள்ள வீடுகள் கட்டி முடிக்கப்படுவதுடன், தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் உதவியோடு கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் அரசாக தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்று பெருமிதத்துடன் இதை தெரிவித்துக் கொள்கின்றேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே