நெல்லை: தந்தை இறந்த செய்தி அறிந்தும் சுதந்திர தினத்தன்று தமது கடமையை நிறைவேற்றி பாராட்டுகளை பெற்றுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர்.
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த அணிவகுப்புக்கு தலைமை ஏற்றவர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.
அவரது 83 வயதான தந்தை நாராயணசுவாமி என்பவர் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் திடீர் என்று ஒருவரை மாற்றியமைக்க முடியாது.
ஆகவே, இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அணிவகுப்பு மரியாதையை தலைமை ஏற்று முடித்தார். அதன் பின்னரே தந்தை உயிரிழந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பின்னரே அனைவருக்கும் இந்த துக்க செய்தி பற்றிய விவரம் தெரிய வந்தது. மகேஸ்வரியின் கணவர் பாலமுருகன் நெல்லை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு காவலராக இருக்கிறார். 2 வாரங்களுக்கு முன் கொரோனாவில் இருந்து மீண்டு நேற்று பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.