ஈரோட்டில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி, நேற்று காலை நகர அரசுப் பேருந்து சென்றுகொண்டு இருந்தது.
லக்காபுரம் அருகே பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில் 20 அடி தூரம் வரை அவர்களை இழுத்துச் சென்ற பேருந்து, சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.
மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்தை அப்புறப்படுத்தியபோது, பேருந்தின் அடிப்பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில் ஈரோட்டில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், இலக்காபுரம் கிராமம், புதுவலசு என்னுமிடத்தில் நேற்று சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதிய விபத்தில், குளூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி என்பவரின் மகன் திரு. மோகம்புரி, அவருடைய மனைவி திருமதி பொங்கி அம்மாள், திரு. சின்னுசாமி என்பவரின் மகன் திரு. பாலசுப்ரமணி மற்றும் திரு. பொன்னுசாமி என்பவரின் மனைவி திருமதி பார்த்தாள் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.