பாத்திமா லத்தீப் மரணத்துக்கு மத ரீதியான பாகுபாடே காரணம்! – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பேராசிரியர் பத்மநாபனை கைது செய்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை ஐஐடியில் முதல் ஆண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதி அறையில் மர்மமாக உயிர் இழந்தது பெரும் வேதனை அளிக்கின்றது.

தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்சன் பத்மநாபன் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.

மாணவி பாத்திமா அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர் ஆவார்.

இதன் காரணமாக ஐஐடி நடத்திய நுழைவுத்  தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாகத் தேர்வாகி ஐஐடியில் முதுகலை மானிடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று அவரது துறை பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் என்னிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் வகையில் அவர் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

சாதிரீதியான, மதரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் தனது பெயர் முஸ்லிமாக இருந்ததே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும் அதனை துறைத் தலைவரிடம் அவர் புகார் அளித்து திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாகச் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெரும் வேதனையை அளிக்கிக்னறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, அவரது மரணத்திற்குக் காரணமான சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே