2020 நவம்பரில் சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சந்திராயன் 3 திட்டம் முடிவானது.
இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திரயான்-1 விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது.
இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது.
இதனையடுத்து சந்திரயான்-1 விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது.
அதன்பின்னர் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது.
கடந்த மாதம் 17ம் தேதி திட்டமிட்டப்படி சந்திரயான்-2-ன் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ தொடர்ந்து செய்தது.
ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும், அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சந்திராயன் 3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர்.
பின்னர் சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் நல்ல முறையில் வேலை செய்து வருவதால் தற்போது சந்திரயான் 3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும், மேலும் சந்திரயான் 3ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும்.
சந்திராயன் 3 திட்டத்தில் ஆர்பிட்டர் இடம்பெறாது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
சந்திராயன் 3 திட்டத்துக்காக விஞ்ஞானிகள் சோம்நாத், ரிட்டு, சுரேஷ் மற்றும் அலெக்ஸ் தலைமையில் இஸ்ரோ பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது.