இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி., சி-48 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50-வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பதால் இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அதன் தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

இந்நிலையில், பூமியை கண்காணிக்கவும், ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் வகையிலும் ரீசாட்-2பிஆா்-1 செயற்கைக்கோளை தாங்கியபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு பாய்கிறது.

628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளுடன், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் வணிக ரீதியாக இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ரீசாட் -2 பிஆர்1 செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகள் பூமியை கண்காணிக்கும்.

இதனிடையியே பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை ஒட்டி இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதியில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பேசிய அவர், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடர்ந்து அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த வரிசையில் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டவுள்ளது என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே