BREAKING NEWS : சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை வழக்கில் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது, ”பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது.

இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த பரிந்துரையை செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

மேலும், இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயா் சா்வீஸ் சொசைட்டி, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம், சபரிமலை கோயில் தந்திரி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் 56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது.

மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்காமல் பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே