தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

வரும் 12-ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது வலைப்பக்கத்தில் பிரதீப் ஜான் கூறுகையில் மார்ச் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கோவை, நீலகிரி, வால்பாறை ஆகிய பகுதிகளிலும் சில நேரங்களில் மழை பெய்யக் கூடும்.

கேரளாவில் கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.

வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய கொஞ்சம் வாய்ப்புள்ளது. 

இந்த மழை இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும். எம்ஜேஓ மார்ச் மாதத்தில் கடந்த வாரம் இந்தியா பக்கம் வந்துள்ளது.

இதனால் வங்கக் கடல் அல்லது அரபிக் கடல் பகுதிகளில் ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த எம்ஜேஓவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே மழையின் தன்மை குறித்து தெரியவரும். தென் தமிழகத்திலும் கேரளாவிலும் மார்ச் இறுதி முதல் ஏப்ரல் வரை நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே