சக்கா ஜாம் – டெல்லியில் கண்காணிப்பு அதிகரிப்பு..!!

விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபடவுள்ளதையொட்டி தில்லி சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலைகளிலுள்ள சுங்கச்சாவடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (பிப்ரவரி 6) ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் தலைநகா் தில்லி தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் விவசாயிகளின் சாலை மறியலையொட்டி தில்லி சாலைகளில் அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் சக்கா ஜாம் அறிவிப்பால் சாலைகள் மூடப்பட்டதால், பொதுமக்கள் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டனர். வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

காஜிப்பூர் எல்லையில் சாலைத்தடுப்புகளுடன் கண்ணீர்ப் புகைக்குண்டுகளுடன் காவலர்களும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

சாலைமறியலின்போது அவசர ஊர்திகள், மருத்துவ வாகனங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே இலக்கு என்றும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே