அமெரிக்க எச்1பி விசா வழங்குவதில் பழைய நடைமுறையே நீட்டிப்பு..!!

அமெரிக்க அரசு, வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ‘எச் – 1பி விசா’ தொடர்பான தற்போதைய நடைமுறையை, டிச., 31 வரை நீட்டித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள், ‘எச் – 1பி விசா’ மூலம், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை பணிக்கு அமர்த்துகின்றன.

இந்த வகையில், ஆண்டுதோறும், 85 ஆயிரம், எச் – 1பி விசா வழங்கப்படுகிறது.

கொரோனா காரணமாக, இந்த விசா வழங்குவதை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், வரும், மார்ச், 31ம் தேதி வரை நிறுத்தி வைத்தார்.

மேலும், ‘குலுக்கல் முறையில், எச் – 1பி விசா வழங்குவதற்கு பதிலாக, வல்லுனர்களின் தகுதி, உள்நாட்டினருக்கு நிகரான ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில், விசா வழங்கப்படும்’ என்றும் அறிவித்திருந்தார். 

இதன்படி, மார்ச், 9ல், எச் – 1பி விசாவுக்கான புதிய நடைமுறை அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவியேற்றதும், எச் – 1பி விசா வழங்குவதற்கான தடையை நீக்கினார்.

எனினும், விசாவுக்கான புதிய நடைமுறையின் அமலாக்கம் குறித்து, அமெரிக்க அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

புதிய நடைமுறைப்படி, எச் – 1பி விசா விண்ணப்பங்களின் பதிவு, தேர்வு செய்வது, திட்டத்தை செயல்படுத்துவது போன்றவற்றுக்கு சில காலம் தேவைப்படுகிறது.

பழைய முறையில் இருந்து புதிய நடைமுறைக்கு மாற்றம் செய்வதற்கான திட்ட வடிவமைப்பை உருவாக்குவதற்கும், சோதனை செய்து, குறைபாடுகளை சரி செய்வதற்கும் சில காலம் ஆகும்.

இத்தகைய சூழலில், மார்ச், 9 முதல், புதிய எச் – 1பி விசா விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்பதால், இத்திட்ட அமலாக்கம், டிச., 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுகிறது.

அதுவரை, வழக்கம் போல பழைய முறைப்படி, எச் – 1பி விசா வழங்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே