கவனக்குறைவு – 3 வயது சிறுமி தண்ணீர் கேனில் தவறி விழுந்து உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்கப்படும் காட்சிகளை டிவியில் பெற்றோர் பார்த்துக் கொண்டிருந்தபோது 3 வயது சிறுமி தண்ணீர் கேனில் தலைகீழாக விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் தூத்துக்குடியில் நடந்திருக்கிறது.

கவனக்குறைவுக்கு எல்லையே இல்லையா??

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்கப்படும் காட்சிகளை கடந்த இரண்டு நாட்களாக தமிழகமே வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தூத்துக்குடியில் இன்னொரு சோக சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மனைவி நிஷா. இவர்களது 3 வயது மகள் தான் ரேவதி சஞ்சனா.

திங்களன்று மாலை 6 மணி அளவில் லிங்கேஸ்வரனும், நிஷாவும் குழந்தை சுஜித் மீட்கப்படும் காட்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் குழந்தை ரேவதி சிறுநீர் கழிப்பதற்காக கழிவறை சென்றுள்ளார்.

பின்னர் கை கழுவுவதற்காக சோப்பு போட்ட குழந்தை தண்ணீரைத் தேடி உள்ளார். வாலி காலியாக இருக்கவே, அருகிலுள்ள கேனில் கப்பை விட்டு நீரை மொண்டு எடுக்க முயன்றுள்ளார்.

தண்ணீர் குறைவாக இருந்ததால் குழந்தைக்கு எட்டவில்லை. மேலும் முயன்ற போது, குழந்தை தலை குப்புற கேனுக்குள் விழுந்து விட்டார்.

சிறிய கேன் என்பதால் குழந்தையால் வெளியில் எழுந்துவர முடியவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து பெற்றோர் குழந்தையை தேடியபோதுதான் கழிவறைக்கு சென்ற நினைவு வந்து அங்கு சென்று பார்த்துள்ளனர்.

குழந்தை கேனுக்குள் கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை சுஜித் மீட்கப்படும் நடவடிக்கைகளின் போதே இன்னொரு குழந்தை உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே