தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே, தலித் சிறுவனை தாக்கி, மலம் அள்ள வைத்ததாக டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுவனால் தற்போது பேச முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரத்தில் இருக்கும் கோடாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் அங்கு இருக்கும் புதருக்குள் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் விரைந்து வந்து அந்த சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஏன் இங்கு மலம் கழித்தாய் என்று கேட்டு சாதி பெயரைக் கூறி அசிங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மலத்தை அவனது கையால் அள்ளி வேறு இடத்தில் வீசுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அந்த இடம் ராஜசேகருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
அந்த மாணவன் அங்கு இருக்கும் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இதுகுறித்து வீட்டுக்கு வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். அவனது பெற்றோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளனர்.
இதையடுத்து பென்னாகரம் டிஎஸ்பி மேகலாவிடம் அவனது பெற்றோர் புகார் கொடுத்தனர். பதிலுக்கு தன்னை சிறுவனின் பெற்றோர் தாக்கியதாக போலீசில் ராஜசேகரும் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, இருதரப்பினரும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு டிஎஸ்பி மேகலா உத்தரவிட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட ராஜசேகர் மீது எஸ்சி/எஸ்டி வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்கியதில் இருந்து அந்த சிறுவனால் சரியாக பேச முடியவில்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறி வருகின்றனர்.
தாக்கப்பட்டதில் அந்த சிறுவனின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவசரமாக இயற்கை உபாதை வந்த காரணத்தினால் அங்கு சென்றதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.