கொடைக்கானலில் போதை பொருட்களுடன் இரவு விருந்து!

கொடைக்கானல் அருகே மலைகிராமத்தில் நள்ளிரவில் மதுஅருந்தி  கேளிக்கையில் ஈடுபட்டபோது பிடிபட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேரை  போலீஸார் எச்சரித்து அனுப்பினர். 

திண்டுக்கல்லை சேர்ந்த நிதீஷ்குமார், தருண் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கிராமமான குண்டுபட்டியில் தனியார் தோட்டத்தில் 6ம் தேதி நள்ளிரவு மதுவுடன் கேளிக்கை விருந்து நடப்பதாகவும், இதற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் என்றும் விளம்பரம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டும் இதேபோல கேளிக்கை விருந்து நடத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேர் கட்டணம் செலுத்தி குண்டுபட்டியில் திரண்டனர்.

பின்னர் நள்ளிரவு 2 மணி முதல் மது அருந்தி ஆடல் பாடலுடன் 276 பேரும் கேளிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த ரகசியத் தகவலின்பேரில், சுமார் 3 மணியளவில் அப்பகுதியை சுமார் 80 போலீஸார் சுற்றிவளைத்தனர். பின்னர் அங்கிருந்த 276 பேரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, மீண்டும் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து 276 பேரையும் போலீஸார் திருப்பி அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து 276 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

எனினும், அனுமதியின்றி இரவு நேரத்தில் கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்த நிதீஷ்குமார், தருண் ஆகியோரையும், கேளிக்கை நிகழ்ச்சிக்கு தோட்டத்தை வாடகைக்கு விட்ட நில உரிமையாளர் கற்பகமணியையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த 25 பொட்டல கஞ்சா, 3 மதுபாட்டில்கள், போதை ஸ்டாம்புகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரையும் கொடைக்கானல் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே