தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாத ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் மீது எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள் பராமரிப்பு குறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரியும், சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அரசிடம் உள்ள ஹெலிகாப்டரின் நிலை என்ன என்பது குறித்தும், அதை மருத்துவ ஆம்புலன்ஸாக பயன்படுத்த உத்தரவிடக் கோரியும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, எல்லா தொழில் நுட்பங்கள், வல்லுநர்கள் இருந்தும் சுஜித்தை காப்பாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த விதிகள் குறித்த நகலை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அவற்றை பார்த்த நீதிபதிகள் அரசு அனைத்தையும் உருவாக்குகிறது, ஆனால் அதை முறையாக செயல்படுத்தாதது ஏன்?? என கேள்வி எழுப்பினார்.
ஆழ்துளை கிணறுகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் குழந்தைகள் சிக்கி உயிரிழப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது என கூறிய நீதிபதிகள், இத்தகைய அலட்சிய உயிரிழப்புகள் தொடர்ந்து நடப்பதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாத ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.