வங்கக் கடலில் உருவான புல் புல் புயல்

வங்கக் கடலில் உருவான புல் புல் புயல் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான புல் புல் புயல் வலுவடைந்து வடகிழக்குப் பகுதிக்கு நகர்ந்து வருகிறது.

இதனால் அடுத்த 5 நாட்களுக்கு ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்கள், மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களிலும் மழை வெள்ள மீட்புப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மேலாண்மையின் 35 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒடிசா, மேற்குவங்கம் தவிர இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 10 ஆம் தேதி அதிகாலை வங்கதேசத்தின் கேபுபரா மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே அதி தீவிர புயலாக வலுப்பெற்று புல்புல் புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே