தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்; ஏனைய வட தமிழக மாவட்டங்கள் , புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் ,நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்; அக்டோபர் 27,28 தேதிகளில், தென்தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே