டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் வீட்டிற்கே சென்று வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
இதனிடையே வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு கிலோ வெங்காயம் உத்தரகாண்டில் 60 ரூபாய்க்கும், ஒடிஷா, மகாராஷ்டிராவில் 70 ரூபாய்க்கும், மத்திய பிரதேசத்தில் 80 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், டெல்லியில் 100 ரூபாயை எட்டியுள்ளது.
இதனால் கிலோ 32 ரூபாய் என ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ வெங்காயம் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி மத்திய மாநில அரசுகளின் வாகனங்கள் மூலம் வீட்டிற்கே சென்று வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடமாடும் வேன்கள் மூலமும், ஆவின் உள்ளிட்ட சில்லறை அங்காடிகள் மூலமும், வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் திட்டத்தை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே வெங்காய விலையை கட்டுப்படுத்த இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள மத்திய அரசு இறக்குமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அடுத்த சில நாட்களில் வெங்காய வரத்து அதிகரிக்கும் என்பதால் அதன் விலை குறைய தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெங்காயத்தின் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறிகளும் கிடுகிடுவென உயர்ந்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டெல்லி தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
வெங்காய விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக முழக்கங்கள் எடுக்கப்பட்டன.