வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கும் வரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரி திமுக உள்ளிட்ட 12 தரப்பினர் தொடர்ப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது, வார்டு வரையறை பணிகள் முடிவடையாமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.
இதனை அடுத்து, பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பழைய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் தமிழக அரசின் இந்த வாதத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
9 மாவட்டங்களில் தேர்தலை நடத்தாமல், பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது சரியல்ல என்று கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்று கேட்டு பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இல்லை என்றால் தேர்தல் அறிவிப்பானையை ரத்து செய்ய நேரிடும் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், மாநகராட்சி, நகராட்சி ஆகிய நகர்புற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிற்பகலில் 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.