சென்னை தேனாம்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!!

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது, மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதே போல தமிழக முழுவதும் திமுகவினரும், திமுக கூட்டணி கட்சியினரும் ஆங்காங்கே கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அன்பகத்தில், உதயநிதி ஸ்டாலினுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, தாயகம் கவி, ஆர்.டி.சேகர் பிரபாகர் ராஜா மற்றும் தூத்துக்குடி ஜோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்த ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இல்ல முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக கட்சி அலுவலகமான, அண்ணா அறிவாலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா நகரில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருப்புக்கொடி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வினர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் திமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தின் வாசலில் நடைபெற்றது. அப்போது, பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை உயர்வு விவசாயிகளுக்கு எதிரான சட்டம் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவண்ணாமலை, திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மருத்துவர் வரதராஜ் தலைமையில் நகர திமுக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே