ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கடந்த 7ஆம் தேதி இடைக்கால அரசை நிறுவினர். அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்போம் என்று கூறியிருந்த தலிபான்கள் தற்போது பெண்களுக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர்.
பெண்கள் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்படும், பிற உரிமைகள் காக்கப்படும் என்றெல்லாம் பேசிய தாலிபான்கள் அண்மையில் மகளிர்நலத்துறை அமைச்சகத்தையே கலைத்தனர்.

பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என மகளிர்நலத்துறை அமைச்சகத்துக்கு பெயரிடப்பட்டது. கடந்த 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போதே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் இருந்தது.
பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் இருக்கிறது. முன்னர் ஆப்கன் பெண்கள் மற்றும் சிறுமிகள் இத்துறையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இத்துறையினரால் பொது இடங்களில் பெண்கள் அடிக்கப்படுவார்கள்.

சாலைகளில் சுற்றித்திரியும் அலுவலர்கள், உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களை பார்த்தால் அடிப்பார்கள். சரியாக உடை உடுத்தாதவர்கள், கை மணிக்கட்டு, கால் தெரிந்தாலும் அடி தான், இசை கேட்பவர்களும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு ஆண்கள் மட்டும் வந்தால் போதும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் பெண்களால் மட்டுமே செய்ய முடியும் என்பன போன்ற பணிகளை மேற்கொள்வோர் மட்டும் வேலைக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.