வெள்ள நீரில் நிலைகுலைந்து விழுந்த பா.ஜ.க. எம்.பி

பீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற பா.ஜ.க. எம்.பி.யின் தற்காலிக படகு வெள்ள நீருக்குள் கவிழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களே அவரை மீட்க நேரிட்டது.

பீகார் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில் பாட்னா மாவட்டத்துக்கு உட்பட்ட மசவ்ரி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பா.ஜ.க. எம்.பி.யான ராம் கிருபால் யாதவ் பார்வையிடச் சென்றார்.

அப்போது டயர் டியூப்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிகப் படகில் வெள்ள நீருக்கிடையே அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாங்கிப் பிடிக்கவே சிலரின் உதவி தேவைப்பட்டது.

இந்த நிலையில் அவர் செய்தியாளர்களின் கேமராக்களுக்கு போஸ் வேறு கொடுத்தார். இந்நிலையில் எடைதாங்காமல் திடீரென படகு கவிழ்ந்ததால் எம்.பி. உட்பட அதில் நின்ற அனைவரும் நிலை தடுமாறி வெள்ள நீருக்குள் விழுந்தனர்.

இதையடுத்து அந்த எம்.பி., யாரை பார்வையிட வந்தாரோ அந்த பாதிக்கப்பட்ட மக்களே அவரை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றி அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே