திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகள் கொள்ளை வழக்கில், காவல்துறை பிடித்து வைத்துள்ள வடமாநில இளைஞர்களுக்கு தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்த கட்ட விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நேற்று அதிகாலை 2 மணி அளவில், கடைச் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த இரு கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது விலங்குகளின் முகத்தைப் போன்ற முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சி மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வட மாநிலத்தவர்கள் சிலர் புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்ற தகவல் கிடைக்கவே போலீசார் புதுக்கோட்டை விரைந்தனர்.
அங்குள்ள டைமன்ட் தங்கும் விடுதியில் இருந்த வட மாநிலத்தவர் 5 பேரை அறையில் வைத்து காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
அவர்களில், அப்துல்லா சேக் என்பவர் அறைக்குள் நுழைந்த போது காவல்துறையினரை பார்த்ததும் 2 வது மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றதால் தலையில் அடிபட்டது. அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மற்றவர்களிடம் திருச்சியில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கிற்கும், தற்போது பிடிபட்டுள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை என்று காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிடிபட்டுள்ளவர்கள், கம்பளி ஆடை விற்பனை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் போலீசை பார்த்ததும் ஒருவர் மட்டும் தப்பி ஓடியது ஏன் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக் கொள்ளை தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.