வெங்காயம் விலை உயர்வால் நஷ்டத்தை சந்திக்கும் பிரியாணி கடைகள்

வெங்காய விலை உயர்வால் பிரியாணி கடை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களை தக்கவைக்க கடையை நஷ்டத்திற்கு இயக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

வெங்காயத்தின் விலை, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல பெரிய வெங்காயம் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, சென்னையில் செயல்படக்கூடிய பிரியாணி கடைகளை ஆட்டம் காணச் செய்துள்ளது.

சென்னையில் இயங்கக்கூடிய சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள், இழப்பை சந்தித்து வருகின்றன.

கடந்த மாதங்களில் 50 கிலோ வெங்காய மூட்டை, 1500 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த நிலையில், தற்போது 4,500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க வெங்காய விலை உயர்விற்கு ஏற்றார் போல், பிரியாணியின் விலையை உயர்த்த முடியாமல் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என சில கடைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறுகின்றனர் சில பிரியாணி கடை உரிமையாளர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே