கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து விடக்கூடாது என்பதற்காக 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
இதனை வரவேற்று அனைத்து மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்க தயாரானாலும் பலர் தங்கள் குடும்ப நிதி நிலை மற்றும் வாழ்வாதாரத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேலை இல்லை என்பதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து தங்களிடமுள்ள சேமிப்பை சாப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அரசு கருதலாம்.
மாத சம்பளத்தையும், தினக்கூலியையும் மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இந்த நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பதைபதைப்பில் உள்ளன.
மாத சம்பளக்காரர்களுக்கோ வங்கியில் பெற்றுள்ள தனிநபர் கடன், இருசக்கர வாகன கடன், கார் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றின் தவணைதொகைகள் மாதம் பிறந்ததும் கதவை தட்ட தயார் ஆகி விடுமே என்ற அச்சம்.
ஏழை எளிய மக்களுக்கு வேலை இல்லாமல் அடுத்த 21 நாட்களை கடன் வாங்கியே கடக்க வேண்டிய கடுமையான நிலை.
தமிழகத்தில் அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும் இலவச அரிசி பருப்பு எண்ணெய் ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.
அதே போல ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் மாதச் சம்பளத்தின் பெரும்பகுதியை தாங்கள் பெற்ற வங்கி கடன்களின் கொடுத்து விட்டு கையை பிசைந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழும் தங்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர்.
அரசு மாத சம்பளத்தை முழுமையாக வழங்க சொல்லிவிட்டாலும் எத்தனை தனியார் நிறுவனங்கள் அரசு உத்தரவை செயல்படுத்த போகின்றன என்பது கேள்விக்குறி தான்.
காரணம் தங்களுக்கும் பொருளாதார இழப்பு என்று காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை முழுமையாக வழங்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு.
அதே நேரத்தில் வங்கி கடன்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு தவணை தொகை செலுத்த தேவையில்லை என்று அறிவித்தால் மட்டுமே மாதச் சம்பளத்தில் தவணைத் தொகையை செலுத்தியே வாழ்க்கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.
நெருக்கடி நிலை சீரடைந்த அடுத்தடுத்த மாதங்களில் அந்த இரு தவணை தொகையை பிரித்து செலுத்தும் வசதியை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதே முறையில் ஆட்டோ, சரக்கு வேன், வாடகை வேன், லாரி உள்ளிட்டவற்றை வங்கி கடனில் வாங்கி தொழில் செய்பவர்களுக்கும் வங்கிகள் அவகாசம் அளிக்க முன்வந்தால் இந்த 21 நாட்கள் மட்டுமல்ல கூடுதலாக 10 நாட்கள் கொடுத்தாலும் மன உறுதியுடன் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க லட்சக்கணக்கான மக்கள் தயார் என்கின்றனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த இரு மாத தவணை தொகையை நிலைமை சீரடைந்த பின்னர் பிரித்து வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டுக்கணக்கில் தவணை தொகையை உரிய நேரத்தில் செலுத்துவோர்களிடமிருந்து இரு மாதங்களுக்கான தவணை தொகையை பின்னர் வசூலிப்பது வங்கிகளுக்கு சிரமமாக இருக்காது என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசின் அறிவிப்புக்காக மாதச் சம்பளதாரர்கள் காத்திருக்கின்றன.