ரகசியமாய் சேகரித்த ரூ.46,000 செல்லாத நோட்டுகள்: வேதனையில் மூதாட்டிகள்

பேரன் பேத்திகளுக்காக ரகசியமாக சேமித்து வைத்த 46,000 ரூபாயும் பணமதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் என தெரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூதாட்டிகள் இருவர் அதிர்ச்சியடைந்தனர்.

பூமலூர் பகுதியைச் சேர்ந்த ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள் சகோதரிகள் அவர்களது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.

75 வயதான காலத்தில் ரங்கம்மாளுக்கு ஏழு பிள்ளைகளும், 72 வயதான தங்கம்மாளுக்கு ஆறு பிள்ளைகளும் உள்ளனர்.

அனைவரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

பூமலூரில் தனித் தனியே வசித்து வரும் மூதாட்டிகள் இருவரும் வயதான காலத்தில் மருத்துவ செலவு, இறுதிச் சடங்கு மற்றும் பேரப் பிள்ளைகளுக்காக ரகசியமாக பணம் சேர்த்து வந்துள்ளனர்.

உடல்நிலை சரியில்லாததால் தங்கம்மாள் பாட்டியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவை என மகன் கேட்டதும், தான் சேர்த்து வைத்து இருப்பதாக கூறி தங்கம்மாள், 22 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார்.

அதை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்.

காரணம் அவை அனைத்தும் பணமதிப்பு நீக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்.

தனது சகோதரி ரங்கம்மாளும் பணம் சேர்ந்து வைத்திருந்ததாக தங்கம்மாள் பாட்டி கூறிய நிலையில், அவரிடம் இருந்ததும் 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுக்களே.

யாருக்கும் தெரியாமல் இத்தனை ஆண்டுகளாய் சிறுகச் சிறுக சேமித்த பணம் செல்லாது என மகன்கள் கூறியதும் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளனர் மூதாட்டிகள் இருவரும்.

மேலும், 2015 ஆம் ஆண்டு வரை தாங்கள் வேலைக்கு சென்று வந்தபோது சேர்த்து வைத்த ரூபாய் நோட்டுகள் இவை எனவும், இவை செல்லாது என தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் பரிதாபத்துடன் கூறுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே