மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக பொறுப்பு அல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார்.
தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து பீகார் தலைமை மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் பெயரிலேயே மணிரத்னம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சூழலில் மத்திய அரசையோ, பாஜகவையோ குற்றம் சாட்டுவது முறையல்ல என்றும், மோடி தலைமையிலான அரசு மீது களங்கம் ஏற்படுத்த முயல வேண்டாம் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை வைப்பதன் மூலம் நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாஜக தடுப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், குற்றம் சாட்டுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் அதிக அளவில் நடக்கிறது என்று குறிப்பிட்டு இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி உள்பட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதற்கு எதிராக பீகார் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு பாஜக தான் காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.
புகார் கொடுத்தவர் தவறான தகவல்களை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தவர் மீது காவல்துறை வழக்கு பதிவும் செய்துள்ளது.