முதல்வர் வீட்டின் அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து உள்ள நிலையில் தமிழகத்தின் மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாக கூறிய நீதிபதிகள், முதல்வர் வீட்டுக்கு அருகிலேயே இந்த நிலை என்றால் மாநிலம் முழுவதும் மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என கற்பனை செய்யமுடியும் என தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.