மார்த்தாண்டத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த சாவியை வைத்து அவர் நகைக்கடையிலும் கொள்ளை

ஜூவல்லரி உரிமையாளரின் வீடு புகுந்து, சாவியை திருடிச் சென்று நகைக் கடையை திறந்து 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பொன் விஜய். இவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், பொன்.விஜய் வீட்டின் மாடிக் கதவை உடைத்து நேற்றிரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 65 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடிதுள்ளனர்.

வீட்டின் தரைதளத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அரவமில்லாமல் இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.

பூஜை அறையில் இருந்த நகைக்கடையின் சாவியையும் திருடிச் சென்ற கொள்ளையர்கள், இரவோடு இரவாக மார்த்தாண்டத்தில் உள்ள ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் நகைக் கடைக்கு சென்றுள்ளனர்.

நகைக் கடையை திறந்து, அங்கிருந்த சுமார் 3 கிலோ நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து பொன்.விஜய் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நகைக்கடையின் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி பதிவில் முகமூடி அணிந்த கொள்ளையன் நகைக் கடையில் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஏஞ்சல் சகிதமாக டிஎஸ்பி ராமசந்திரன், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

கடந்த டிசம்பர் மாதம் மார்த்தாண்டம் சிலங்கா ஜுவல்லரியில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் வடமாநில கொள்ளைக் கும்பல் மார்த்தாண்டத்தில் தங்கி இருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே