தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடராண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுவாமிக்கு விபூதி, சந்தனம், கதம்பத்தூள், நெல்லிப்பொடி, வில்வப்பொடி, உள்ளிட்ட 33வகையான பொருட்களில் அபிஷேகங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரையை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு ராஜநாராயண மண்டபத்தில் தியாகராஜ சுவாமிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 

காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஆரூத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

காரைக்கால் அடுத்து கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் வெள்ளை சாற்று அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவையொட்டி  நடராஜருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.

தொடர்ந்து தியாகராஜ சுவாமி பதஞ்சலி முனிவர் மற்றும் வியக்ரபாத முனிவர்களுக்கு இடது பாதம் காட்டும் பாத தரிசன நிகழ்ச்சியும், நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு  சிறப்பு அலங்காரம் மற்றும் வீதியுலாவும் நடைப்பெற்றது.

இதில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.

நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் தாமிரசபையில் இன்று அதிகாலை நான்கு 30 மணியளவில் நடராஜர் திருத்தாண்டவமாடிய ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது.

முன்னதாக நடராஜ பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம், பசு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவபெருமான் திரு நடனம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றாக போற்றப்படும், நெல்லை மாவட்டம் செப்பறையில் உள்ள அழகிய கூத்தர் திருக் கோவிலில், அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆருத்ரா தரிசன பூஜைகள் மற்றும், கோ பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே