மின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை!

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு பிறகு மாமல்லபுரத்தை காண சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள புராதன சின்னங்கள் மின்னொளியில் மிளிர்கின்றன.

அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் என பல்லவர் கால சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் குடைவரை கற்சிற்பங்களை பிரதமர் மோடியும், சீன அதிபரும் கண்டு ரசித்த பின் இந்த இடங்களைக் காணும் ஆர்வம் பலருக்கும் அதிகரித்து உள்ளது.

ஆனால் தலைவர்கள் பார்வையிட்டுச் சென்ற பின்பு மின் விளக்குகள் ஒளிராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் குடைவரை சிற்பங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் இரவிலும் கண்டுகளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதனை ஏற்று மாமல்லபுரம் புராதன சிற்பங்களை வார விடுமுறை நாட்களில் மின்னொளியில் இரவு 9 மணி வரையில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

மாமல்லபுரத்தின் முக்கிய தளங்களை பார்க்க குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வருகிறார்கள்.

தலைவர்கள் வரும்போது சுத்தமாக இருந்த இடங்கள் அதற்குப்பின் முறையாகப் பராமரிக்கபடவில்லை என்ற புகாரும் எழுந்தது.

இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குப்பை போடாமல் கண்காணிக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே