பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், விதியை மீறி ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைபடத்துக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அதை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடுவது மற்றும் அதற்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறினார்.
அதேபோல், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில், திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பு செய்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்தார்.