காற்று மாசால் டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு: ODD or EVEN திட்டம் என்றால் என்ன?

தலைநகர் டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்று மாசு தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, ஒற்றை, இரட்டைப் படை பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்குவதற்கான விதிமுறை இன்று அமலுக்கு வந்தது. 

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால், டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக அங்கு காற்றின் தரக் குறியீடானது 439ஆக உள்ளது.

இது காற்று மாசு தீவிரம் அடைந்து விட்டது என்பதைக் குறிப்பதாகும்.

ராஜ்பாத், லோதி சாலை, ஐ.டீ.ஓ., ஆனந்த் விஹார் ஆகிய பகுதிகளில் காற்று மாசுவானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

புகை சூழ்ந்து காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி செல்கின்றன.

காற்று மாசு தீவிரம் அடைந்ததை அடுத்து, ஒற்றை இரட்டைப்படை பதிவெண் கார்கள் இயக்க விதிமுறை அங்கு அமலுக்கு வந்தது.

காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரை இந்த விதிமுறை கடைபிடிக்கப்படும்.

அதன்படி 2,4,6,8, என முடியும் பதிவெண்களைக் கொண்ட கார்கள் ஒருநாளும், 1,3,5,7,9 என முடியும் பதிவெண்களைக் கொண்ட கார்கள் அடுத்த நாளும் இயக்கப்பட வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று விதிமுறை தளர்த்தப்படும்.

இந்த விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இன்று இரட்டைப் படை பதிவெண் கொண்ட கார்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற சூழலில் ஒற்றைப் படை பதிவெண் கொண்ட கார்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இம்மாதம் 15 ஆம் தேதி வரை ஒற்றை, இரட்டைப்படை பதிவெண் வாகன இயக்க விதி அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

ஒற்றை இரட்டை இலக்க கார்கள் இயக்க விதி அமலுக்கு வந்ததால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் இருவருடன் கார் பூலிங் முறையில் பயணித்தார்.

துணை முதலமைச்சர் மனீஷ் சிஷோடியா சைக்கிளில் சென்றார்.

பின்னர் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் அன்றாடம் 30 லட்சம் கார்கள் இயங்கும் என்ற நிலையில், இன்று 15 லட்சம் கார்கள் மட்டுமே இயங்கும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக காற்று மாசு குறையும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விதியை மக்கள் மதிப்பதாகவும் வரவேற்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே விதியை மதிக்காத கார்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேவேளையில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் விதியை பயன்படுத்திக் கொண்டு ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே