பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளநிலையில் புதிய முதல்வராக மூத்த தலைவர் அம்பிகா சோனி நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்ததாக தெரிகிறது. ஆனால் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு உள்ளது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.
எனினும், முதல்வர் அமரீந்தரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருதரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அதன்பின், மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.
இந்நிலையில் முதல்வர் அமரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் பஞ்சாப் புதிய முதல்வர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனியை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்தது.
அம்பிகா சோனி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேற்று இரவு நேர சந்தித்து பேசியதாக தெரிகிறது. அப்போது தனக்கு முதல்வர் பதவியில் விருப்பமில்லை என அம்பிகா சோனி கூறியதாக தெரிகிறது. பஞ்சாபை பொறுத்தவரை சீக்கியர் ஒருவரே முதல்வராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தன்னை தேர்வு செய்தால் கட்சிக்கு பாதிப்பே ஏற்படும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.
கட்சி நிர்வாகிகள் பலர் பஞ்சாப் பிரச்சினையை மோசமாக கையாண்டதாகவும் அம்பிகா சோனி வருத்தம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பஞ்சாபிற்கான காங்கிரஸின் மூன்று அரசியல் பார்வையாளர்கள் ஒவ்வொரு எம்எல்ஏவையும் சந்தித்து புதிய முதல்வர் குறித்து கருத்துக்களைப் பெறுகிறார்கள். பின்னர் அவர்கள் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்க மூவரும் கட்சி உயர் அதிகாரிகளுக்குத் திரும்பத் தெரிவிக்கவுள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் 78 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி வழக்கம் போல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர், சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா ஆகியோர் பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சருடன் இரண்டு துணை முதலமைச்சர்களும் நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.