திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ தங்க நகைகள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட திருவாரூர் முருகன், வேறு ஒரு வழக்குக்காக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கர்நாடகாவில் கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைத்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக விசாரணையில் முருகன் ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் கொடுத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்திற்கு திருவாரூர் முருகனை பெங்களூர் போலீசார் அழைத்து வந்தனர்.
அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டியபோது மண்ணுக்குள் கிலோ கணக்கில் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நகைகளை கைப்பற்றிய பெங்களூரு காவலர்கள் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் கர்நாடகாவிற்கு புறப்பட்டனர்.
இதனை அறிந்து, தனிப்படை காவலர்கள் சினிமா பாணியில் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்த விசாரணையில் வேப்பந்தட்டையில் கைப்பற்றப்பட்ட நகைகள் லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் முருகன் மற்றும் கர்நாடகா காவலர்களிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.