முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்து ராஷ்டிரபதி பவன் வரை உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
1960 ஆம் ஆண்டில் விஞ்ஞானியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த அப்துல் கலாம் பின்னர் படிப்படியாக உயர்ந்து, 1998 ஆம் ஆண்டு உலகமே திரும்பிப் பார்த்த பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டி உலக அரங்கில் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றி காட்டியவர்.
நாட்டின் அறிவியல் திறனை மேம்படுத்தியதால் ஏவுகணை நாயகன் என்றும் புகழப்படுகிறார்.
ஏழை மாணவனாக பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்தாலும் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்தது என்னவோ குழந்தைகளை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுவதுதான்.
குழந்தைகளிடம் கேள்விகளை கேட்பது, குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று மேடைப் பேச்சுக்களை சுவாரஸ்யமான நிகழ்வு களாக மாற்றிக் காட்டியவர் கலாம்.
அதுமட்டுமின்றி சாதிக்க துணிந்தவனுக்கு எதுவுமே ஒருபோதும் தடையில்லை என்று தன்னையே ஓர் உதாரணமாகக் காட்டி மாணவர்களை கனவு காணச் சொல்லி தூண்டியவர் அப்துல் கலாம்.
என்னதான் குடியரசுத் தலைவர், அறிவியல் வல்லுநர் என்று பல்வேறு பரிமாணங்களில் வலம் வந்திருந்தாலும், உலக அரங்கில் தமிழின் பெருமைகளை பதிய வைத்த தமிழ் காதலர் அப்துல்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசும்போது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்று வரிகளை எடுத்துச் சொல்லி உலக நாடுகளின் கவனம் ஈர்த்தவர்.
உலக நாடுகளுக்கு மட்டுமின்றி நம் நாட்டில் உயர பறக்க துடித்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு தனது அக்னி சிறகை விரித்து காட்டி, கனவு நாயகனாக வலம் வந்தவர்.
ஒரு முறை ஜெனிவாவில் நடந்த கடவுள் துகள் கண்டுபிடிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
அணு உருவாவது குறித்து பல நாடுகளும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அணுவைப் பற்றி பேசிய அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்து என்ற திருக்குறளை எடுத்துக்கூறி தமிழை அறிவியல் தமிழ் என்ற பரிமாணத்தில் உலக அரங்கில் பதிய வைத்தார்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும்கூட ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி ஊக்கமளித்தவர்.
தனது வாழ்நாளில் கடைசி நாள் வரை மாணவர்கள் மத்தியில் தனது ஊக்கமளிக்கும் பேச்சால் உற்சாகத்தை அள்ளி கொடுத்து வந்த அப்துல் கலாம் 2020 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்றும் கனவு கண்டு வந்தார்.
கனவுகளின் காதலன், ஏவுகணை நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று அனைவரும் அவரை நினைவு கூறுவோமாக..!!!