வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை என எதிர்க்கட்சிகள் கூப்பாடு போடுகின்றனர்.

முதல்வர் வெளிநாட்டு பயணம் போனதற்கு என்று மட்டுமல்ல, பொதுவாகவே அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் குற்றச்சாட்டை வைக்க எதிர்க்கட்சிகள் வெள்ளையறிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம்.

வெள்ளம் வந்தால் வெள்ளை அறிக்கை, வெளிநாடு பயணம் சென்று திரும்பினால் வெள்ளை அறிக்கை, இப்படி எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையை வெளியிட சொல்லி எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்க, அதற்கு “வெள்ளை அறிக்கை என்ன வெள்ளரிக்காய் அறிக்கை கூட தருவோம்” என்கின்றனர் ஆளுங்கட்சியினர்.

கருப்பு என்பது ஒன்றை மறைக்க பயன்படுத்தக்கூடிய வார்த்தை என்பதால் அதற்கு மாற்றாக எதையுமே மறைக்காமல் முழு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே வெள்ளை அறிக்கைகான விளக்கமாகப் பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற பல உதாரணங்களை சொன்னாலும் வெள்ளை அறிக்கையில் என்ன மாதிரியான விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கும் தோராயமாக வரையறைகள் நிர்ணயக்கப்பட்டுள்ளன.

  • வெள்ளை அறிக்கை என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாக இருக்க வேண்டும்.
  • புள்ளி விபரங்களுடன் விபரங்களை எடுத்துரைக்கும் அறிக்கையாக அது அமைய வேண்டும்.
  • அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
  • அரசின் திட்டங்களை மக்களுக்கு எளிதில் புரிய வைக்கும் வகையில் வெள்ளை அறிக்கை விளங்கவேண்டும்.
  • ஒரு திட்டம் தொடங்கப்பட்டது முதல் முடியும் வரை அனைத்து நிகழ்வுகளும் அந்த அறிக்கையில் அலசப்பட வேண்டும்.
  • வெள்ளை அறிக்கை மீது விமர்சனம் செய்ய விவாதம் நடத்த வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், என வெள்ளை அறிக்கைக்கு நிர்ணயங்கள் உள்ளன.

தமிழக வரலாற்றில் வெள்ளை அறிக்கை என்ற ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறதா?? என்றால் அத்திப்பூ பூத்தார் போல நடந்திருக்கிறது என பதில் கூறலாம்.

எந்த ஒரு திட்டத்திலும் தமிழக அரசாங்கம் மட்டுமல்லாது பல தனியார் நிறுவனங்கள் அதனுடன் தொடர்பு இருக்கும் சூழலில் சில சமயம் அந்த திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தவும், தடுத்து நிறுத்தவும் இந்த வெள்ளை அறிக்கை சாதகமாக அமைந்துவிடும் என்பதால் வெள்ளை அறிக்கை வெளியிடுவது சரியாக இருக்காது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

அளவுக்கு மீறிய சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. அதுபோல “அரசுக்கோ, அரசு சார்ந்த திட்டங்களை செயல்படுத்த கூடிய நிறுவனங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துமே ஆனால் தற்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும் வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும்” என்பது அரசின் கருத்து.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே