தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஏஐசிடிஇ அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் வெளியானதாகவும், அதில், பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்றும்; தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர தகுதி பெற முடியாது என்றும் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்தக் கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதுபோன்ற எந்த கடிதத்தையும் தான் தமிழக அரசுக்கு அனுப்பவில்லை என்றும்; ஏஐசிடிஇ-யின் கடிதத்தை நான் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ஏஐசிடிஇ அனுப்பியதாக வெளியான கடிதம் உண்மையானதா என்ற கேள்விக்கு அதனை உறுதிப்படுத்தும் வேலை எனக்கு இல்லை, ஏஐசிடிஇ-யை தொடர்பு கொண்டு அந்த கடிதம் உண்மையானதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார்.
தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் எழுத வேண்டிய அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதனை ஏஐசிடிஇ ஏற்க மறுத்து இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் அது தொடர்பான எந்த மின்னஞ்சலும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.