ரூ.40 ஆயிரம் கோடியை காப்பாற்றிய 80 மணி நேர முதல்வர் – பாஜக எம்.பி பரபரப்பு தகவல்

மாநில அரசின் கருவூலத்தில் இருந்த 40 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு அனுப்பவே தேவேந்திர பட்நாவிஸ் அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்று, பின்னர் ராஜினாமா செய்தார் என்று பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில், அஜித் பவார் திடீர் ஆதரவு அளித்ததால் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.

எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில் பட்நாவிஸ் அரசு 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் அஜித்பவார் பின்வாங்க பெரும்பான்மை இல்லாததால் பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.

சுமார் 80 மணி நேரம் மட்டுமே அவர் முதல்வராக இருந்தார்.

இந்த நிலையில், தேவேந்திர பட்நாவிஸ் அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்று, பின்னர் ராஜினாமா செய்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமான அனந்தகுமார் ஹெக்டே புது காரணத்தை சொல்லியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அனந்த குமார் ஹெக்டே, ஒரு கட்டத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமையும் நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்.

அப்படி வரும் நிலையில், 40 ஆயிரம் கோடி ரூபாயை கையாளும் அதிகாரம் முதலமைச்சராக வருபவருக்கு வரும். சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தால் அந்த பணம் வீணாக்கப்படும்.

இதனால் மத்திய அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திருப்பி அனுப்பவே பா.ஜ.க அவசர அவசரமாக ஆட்சி அமைத்ததாக அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தேவேந்திர பட்நாவிஸ், தான் முதல்வராக இருந்தபோது எந்த பெரிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சை குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே