அமெரிக்க வாழ் இந்தியரான சுவாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெர்சிவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (பிப்.18), வியாழக்கிழமை இரவு 20.55 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.

இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, நாசா தன் பெர்சிவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.

பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் என நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாயின் ஜெசெரோ பகுதியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது.

எனவே, அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் ஸ்வாதி மோகன் உறுதி செய்தார்.

ஸ்வாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்வாதி மோகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 19) தன் ட்விட்டர் பக்கத்தில், “நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள்.

இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம்!

நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்படைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே