கோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மூத்த அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் என மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுப்பது, அணைகளின் நீர்வரத்தை கண்காணிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்தும், மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடு இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நாளை மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடு இடிந்ததால் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *