ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது – முதலமைச்சர்

ஹைட்ரோ கார்பன் உட்பட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முன்னதாக சட்டப்பேரவையில் இன்று பேசிய ஆலந்தூர் திமுக எம்.எல்.ஏ. தா.மோ. அன்பரசன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும்; எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோகார்பன் உட்பட தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வர வாய்ப்பில்லை என்று கூறினார்.

இதற்கேற்ப சட்டப்பேரவையில் தெளிவான சட்டம் இயற்றப்பட்டுவிட்டதாகவும்; ஆனால் அப்போது திமுக உறுப்பினர்கள் அவையில் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

மேலும், தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக, முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே