தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 70 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விஸ்வநாதன், இன்டஸ் இன்ட் வங்கியின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள தனது பண்ணை வீட்டுக்கு, குடும்பத்துடன் சென்று வார விடுமுறையை கழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வார விடுமுறையை பண்ணை வீட்டில் கழித்து விட்டு நுங்கம்பாக்கம் திரும்பிய விஸ்வநாதன், வீட்டின் உள்ளே ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருப்பதை பார்த்துள்ளார்.

பீரோவை சோதனை செய்தபோது, அதில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் அரைகிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஸ்வநாதன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என்பதை அறிந்தே மர்மநபர்கள் துணிந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே