6 பந்தில் 6 சிக்ஸர்கள்: இலங்கையை வெளுத்த பொல்லார்ட்!

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரன் பொல்லார்ட் சாதனைப் படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லா, தனுஷா குணதிலகா துவக்க வீரர்களாகக் களம் கண்டனர். இதில் குணதிலாக வெறும் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய பதும் நிஷனாவுடன் டிக்வெல்லா பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தார். இருவரும் 30 ரன்களை கடந்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்கள் மட்டும் சேர்த்து பெவிலியன் திரும்பியதால், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 131/9 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் (26), இவின் லிவிஸ் (28) ஓரளவுக்குச் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்நிலையில் 4ஆவது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால், லிவிஸ், கிறிஸ் கெய்ல் (0), நிகோலஸ் பூரன் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கெய்ரன் பொல்லார்ட், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்சயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டு கெத்து காட்டினார். இறுதியில் 13.1 ஓவரில் 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தலான வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருதை பொல்லார்ட் தட்டிச்சென்றார். ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதுவும் ஒரே பவுலருக்கு எதிராக இந்த சாதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே